● து. செல்வராஜு, விழுப்புரம்.
தங்களது ஜோதிடத்தொண்டு வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உள்ளது. இறைவன் தங்களுக்கு நீண்டநெடிய ஆயுளைத் தரப் பிரார்த்திக்கிறேன். எங்கள் மகளுக்கு மூன்று வருடங்களாக மாப்பிள்ளை பார்க்கிறோம். சரியாக அமையவில்லை. எப்போது திருமணம் கூடும்? அரசு வேலை கிடைக்குமா?
மகள் ரம்யா சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, தனுசு லக்னம். லக்னத்தில் உள்ள சனி கன்னி ராசியைப் பார்க்கிறார்; 7-ஆம் இடத்தையும் பார்க்கிறார். 2-ல் ராகு, 8-ல் கேது. நாகதோஷம். இதுவே திருமணத் தடைக்கும் தாமதத்துக்கும் காரணம்! இப்படியிருந்தால் 30 வயதில்தான் திருமண யோகம். நடப்பு 2018 ஜூலையில் 28 வயது முடிந்து 29 வயது ஆரம்பம். 2019 ஆடிக்குமேல் நல்ல வரன் அமையும். தற்போது தனியார் பள்ளியில் வேலை அமையும். 2020-ல் சனிப்பெயர்ச்சிப்பிறகு அரசுக்கல்லூரியில் வேலை கிடைக்கும். ஒரே நாளில் கோனேரிராஜபுரம், திருவீழிமிழலை, திருமணஞ்சேரி ஆகிய மூன்று தலங்களிலுள்ள மாப்பிள்ளை சுவாமியை (சிவனை) வழிபட்டால் திருமணத்தடையும் விலகும்; அரசு வேலையும் அமையும். காரைக்கால் சாலையில் எஸ்.புதூரில் இறங்கி கோனேரிராஜபுரம் போகலாம். கும்பகோணம்- மயிலாடுதுறை பாதையில் ஆடுதுறையிலிருந்தும் போகலாம். மயிலாடுதுறை- திருவாரூர் சாலையில் பூந்தோட்டம் அருகில் திருவீழிமிழலை உள்ளது. கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் குத்தாலம் அருகில் திருமணஞ்சேரி உள்ளது. மூன்று இடங்களிலும் மாலை சாற்றி ரம்யா பேரில் அர்ச்சனை செய்து வழிபடவும்.
● ஆர். ராமசுப்பிரமணியன், சங்கரன்கோவில்.
எனக்கு எப்போது திருமணம் நடை பெறும்? இதே கவலையால் என் தகப் பனார் இறந்துவிட்டார். என் தம்பி திருமணத்துக்கு அவசரப்படுகிறான். அவன் திருமணம் முடிந்துதான் எனக்கு ஆகுமா? நான் ஜெராக்ஸ் கடை நடத்துகிறேன்.
விருச்சிக லக்னம், சதய நட்சத்திரம், கும்ப ராசி. கும்ப ராசியிலுள்ள செவ்வாய், கன்னியிலுள்ள சனியைப் பார்ப்பதும், அவருடன் குரு (ராசிக்கு 8-ல்) மறைவதும் தோஷம். நடப்பு வயது 38. இதுவே திருமண வயதைக் கடந்த காலம். உங்கள் தம்பிக்குத் திருமணம் நடந்தால் உங்கள் திருமணம் இன்னும் தள்ளிப்போகும். எனவே காரைக்குடியில் சுந்தரம் குருக்களைத் தொடர்புகொண்டு நீங்களும் தம்பியும் காமோகர்ஷண ஹோமமும், கந்தர்வராஜ ஹோமமும் செய்து இருவரும் கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். வைகாசிக்குள் இருவருக்கும் பெண் அமைந்துவிடும். செல்: 99942 74067-ல் தொடர்புகொண்டு செலவு விவரம் அறியலாம். நல்ல மணவாழ்க்கை அமையும். சுமார் 19-21 ஹோமங்கள் செய்வார்கள். தாயாருக்கும், உங்கள் இருவருக்கும் கலச அபிஷேகம் செய்யப்படும். சகோதரிகள் இருவரின் குடும்பத்தார் பேர்களையும் ஆயுஷ்ஹோமத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.
● எஸ். ஜெயஸ்ரீ, சென்னை-20.
என் மகன் ஷ்யாம்- பூச நட்சத்திரம், கடக ராசி. எப்போது திருமணம் நடக்கும்? இதற்குமுன் என் மகள் காயத்ரியின் திருமணம் 2017-ல் கூடிவரும் என்று சொன்னீர்கள். அதேபோல் அவள் திருமணம் 2017 ஜூன் மாதம் சிறப்பாக நடைபெற்றது. நன்றி!
ஷ்யாம் பூச நட்சத்திரம், கடக ராசி, ரிஷப லக்னம். 8-ல் செவ்வாய்- சனி இருப்பதும், அவர்களுக்கு வீடு கொடுத்த குரு 12-ல் மறைவதும் தோஷம். 7-க்குடைய செவ்வாயும் 8-ல் மறைவது தோஷம். எனவே அவருடைய படிப்பு, உத்தியோகம், ஆற்றல், வருமா னத்துக்குச் சமமான நல்ல இடத்து சம்பந்தமும் உயரமான பெண்ணும் அமைவதும் கடினம். தற்போது 31 வயது வருகிற மார்ச்சில் முடியும். 35 வயதுவரைகூட காத்திருக்கும் சூழ்நிலை வரலாம். அதனால் காரைக்குடியில் சுந்தரம் குருக்களைத் தொடர்புகொண்டு (செல்: 99942 74067) காமோகர்ஷண ஹோமமும், கந்தர்வராஜ ஹோமும் செய்து அவருக்கு கலச அபிஷேகம் செய்தால் மாஸ்டர் டிகிரி படித்த வேலை பார்க்கும் நல்ல பெண் அமையும். கேது தசை நடப்பதால் வாஞ்சாகல்ப கணபதி ஹோமம் உள்பட 19 வகையான ஹோமம் செய்வார்கள்.
● கே. ஜானகி, சங்கரன்கோவில்.
எனது தகப்பனார் ஹார்ட் அட்டாக் வந்து சர்ஜரி செய்துள்ளார். ஒரே அண்ணன். வெளிநாட்டில் வேலை செய்கிறான். எனக்குத் திருமணம் எப்போது நடைபெறும்? பொறுப்புடன் செயல்பட ஆளில்லை.
மிருகசீரிட நட்சத்திரம், மிதுன ராசி, கும்ப லக்னம். லக்னத்துக்கு 2-ல் ராகு, 8-ல் கேது. 7-க்குடைய சூரியன் 12-ல் மறைவு. 7-ஆம் இடத்தை விருச்சிகச்சனி பார்க்கிறார். சனியை மேஷச் செவ்வாயும் பார்க்கிறார்; குருவும் பார்க்கிறார். இவையெல்லாம் திருமணத்தடைக்கு முக்கியமான காரணமாகும். நடப்பு குரு தசை. 2019, பிப்ரவரி 23-ல் ராகு- கேது பெயர்ச்சிக்குப்பிறகு அப்பாவுக்கு வேண்டியவர்கள்மூலமாக நல்ல வரன் பேச்சுகள் வரும். 2019-ல் குருப்பெயர்ச்சிக்குப்பிறகு திருமணம் கூடிவரும். ஒரு சனிக்கிழமை கடையநல்லூர் சென்று கிருஷ்ணாபுரம் ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சனேயருக்கு படிப்பாயசப் பூஜைசெய்து, 19 நெய் தீபமேற்றி பிரார்த்தனை செய்துவரவும். ஆஞ்சனேயரே திருமணத்துக்கு பொறுப்புடன் செயல்பட்டு ஆசிர்வதிப்பார்.
● கே. ராஜு, சேலம்-6.
என் பேரன் முரளிதரன் ஜாதகம் திருக்கணிதம் + வாக்கியம் இரண்டும் அனுப்பியுள்ளேன். அவன் ஜாதகப்படி காவல்துறை வேலை அமையுமா? திருமணம் எப்போது நடக்கும்? பி.டெக் (ஐ.டி.) முதல் வகுப்பில் தேர்வு பெற்றுள்ளான்.
திருக்கணிதப்படி மக நட்சத்திரம், சிம்ம ராசி. வாக்கியப் பஞ்சாங்கப்படி ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி. நட்சத்திரமும் ராசியும் மாறுகிறது. நீங்கள் பொருத்தம் பார்ப்பதும், ஜாதகப்பலன் பார்ப்பதும் ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி என்றே பார்க்கவேண்டும். அதுதான் நடைமுறையில் சரியாக ஒத்துவருகிறது. தமிழ்நாட்டிலுள்ள எல்லாக் கோவில்களிலும் வாக்கியப் பஞ்சாங்கப்படிதான் குருப் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு- கேது பெயர்ச்சி போன்ற கிரகப் பெயர்ச்சி உற்சவம் கொண்டாடப்படுகிறது. மற்றவர்களின் திருப்திக்காக திருக்கணிதப்படி வரும் தேதிகளிலும் நடத்தப்பட்டாலும் அது அங்கீகாரமாக அமையவில்லை. இரண்டு ஜாத கத்திலும் லக்னம் மாறவில்லை. மேஷ லக்னம் தான். அதன்படி 10-ல் ராகு நிற்க, அவரை சந்திரன்- குரு பார்ப்பதால் அரசு வேலை அமையும். 10-க்குடைய சனி 9-ல் நின்று, லக்னாதிபதி செவ்வாயால் பார்க்கப்படுவதாலும் காவல்துறை வேலைக்கும் வாய்ப்புண்டு. திருமணம் 30 வயதில் நடைபெறும்.
● எஸ்.ஜே. சுமதி, வேளச்சேரி.
லாவண்யாவுக்கும், ஜஸ்வந்திக்கும் சுந்தரம் குருக்களிடம் சென்று ஹோமம் செய்யச் சொன்னீர்கள். மார்ச் மாதம் போய் பரிகார ஹோமம் செய்துவிட்டு வந்தோம். லாவண்யாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. எப்போது திருமணம் நடைபெறும்? கலப்புத் திருமணமா? காதல் திருமணமா? ஐஸ்வந்திக்கும் எப்போது திருமணம் நடக்கும்? இவருக்கும் முறையான திருமணமா? கலப்புத் திருமணமா? மூத்தவளுக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை?
அரச மரத்தைச் சுற்றியதும் அடிவயிற்றைத் தடவிப்பார்த்து கரு உருவாகவில்லையே என்று வருத்தப்பட்டது மாதிரி இருக்கிறது நீங்கள் கேட்பது! லாவண்யாவுக்கு 2019 மார்ச் மாதம் 31 வயது முடியும். அதன்பிறகு லாவண்யாவுக்கு நல்ல வரன் அமையும். ராசியில் செவ்வாய்- சனி சேர்க்கை இருந்தாலும், குரு வீடு என்பதாலும், குரு பரிவர்த்தனையாகிப் பார்ப்பதாலும், கலப்புத் திருமணம், காதல் திருமண தோஷம் விலகும். அதற்குமேல் பரிகார ஹோமம் செய்ததால் முறையான திருமணம்தான் என்பதில் சந்தேகம் வேண்டாம். என்றாலும் அதற்கு 31 வயது முடியவேண்டும். கெட்டது உடனே நடக்கும். நல்லது தாமதமாகத்தான் நடக்கும். அடுத்து ஜஸ்வந்திக்கும் 7-க்குடைய குரு 2-ல் உச்சம் என்பதால் விதிவிலக்கு உண்டு. பரிகார ஹோமம் செய்த பலன் முறையான திருமணம்தான் நடக்கும் என்பது கணக்கு. நம்பிக்கையோடு இருங்கள். அக்காவுக்குத் திருமணம் முடிந்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுக்குள் தங்கைக்கும் திருமணம் முடியும் என்பது எனக்குத் தெரிந்த பலனாகும். நல்லதே நினையுங்கள். நல்லதே நடக்கும். வேறு எந்தப் பரிகாரமும் அவசியமில்லை.
● வ. சேகர், திருப்பதி.
என் மகன் திருமணம் எப்போது நடைபெறும்? வெளிநாட்டு யோகம் உண்டா? தோஷங்கள் உண்டா?
சேகர் என்பது உங்கள் மகன் பேரா அல்லது தகப்பனார் பேரா? எதுவாக இருந்தாலும் ஆயில்ய நட்சத்திரம், கடக ராசியில் பிறந்த ஜாதகருக்கு (12-12-1995-ல் பிறந்தவர்) நடப்பு 23 வயதுதான். துலா லக்னம், கடக ராசி. ராசிக்கு 8-ல் சனி இருப்பதால் 27 வயதுக்குமேல்தான் திருமணம். முன்னதாக அவருக்கு வெளிநாட்டு வேலைக்குப் போக வாய்ப்புண்டு.
● பெ. கந்தசாமி, பசுபதிபாளையம்.
என் மகன் மகேஷ் எம்.பி.ஏ., படித்துள்ளார். எப்போது வேலை கிடைக்கும்? அரசு வேலையா? தனியார் துறையா? திருமணம் எப்போது நடைபெறும்? பரிகாரம் செய்யவேண்டுமா? எங்கே செய்யவேண்டும்?
சிம்ம லக்னம், சிம்ம ராசி, மக நட்சத்திரம். குரு மகரத்தில் நீசம். 7-க்குடைய சனி, கேது- ராகு சம்பந்தம். 34 வயதாகிறது. தோஷங்கள் இருப்பதால் காரைக்குடியில் சுந்தரம் குருக்களிடம் வேலைக்கும், திருமணத்துக்கும், எதிர்கால முன்னேற்றத்துக்கும் எல்லாவற்றுக்கும் சேர்த்து சுமார் 20 ஹோமம் செய்து மகேஷிற்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும். அத்துடன் அவர் பெற்றோருக்கு ஆரோக்கியத்துக்கு தன்வந்தரி ஹோமமும், ஆயுள்விருத்திக்கு ஆயுஷ்ஹோமமும் செய்து கலசஅபிஷேகம் செய்துகொள்ளலாம். செல்: 99942 74067-ல் தொடர்புகொண்டு விசாரிக்கவும்.
● ஆர். ராமகிருஷ்ணன், பெருமாநல்லூர்.
எனக்கு 70 வயது. இதுவரை ஒரு ரூபாய்கூட சேமிப்பு இல்லை. இறைவன் குரு பகவான்தான் துணையாக இருந்து வழிநடத்துகிறார். குடும்பம்- பிள்ளைகள் பிரிந்து போய்விட்டார்கள். ஓய்வெடுக்கவேண்டிய காலத்தில் திருப்பூரில் வேலை செய்து வாழ்க்கைப் பயணத்தை ஓட்டுகிறேன். மீன ராசிக்கு 8-ஆம் இடத்து குரு பகவான் செய்த விளையாட்டுகளை மிக அற்புதமாக எழுதியிருந்தீர்கள். எனது வாழ்க்கையில் அப்படியே நடந்தது. 9-ஆம் இடத்து குரு இப்போது பள்ளத்தை நிரப்புவார் என்று நம்புகிறேன். கையில் பணம் இல்லாவிட்டாலும் உண்மை, நேர்மை, நீதியோடு வாழ்ந்துவருகிறேன். எனக்கு திடீர் தனயோகம் உண்டா? என் தாய் பிறந்த மண்ணில் வீடுகட்டி கடைசிக்காலத்தை நிறைவுசெய்ய ஆசைப்படுகிறேன்; நிறைவேறுமா?
உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, தனுசு லக்னம். லக்னாதிபதி குரு ஆட்சி. அவர்தான் ராசிநாதன். எனவே தர்மத்தின்வழியே நடக்கலாம். காசு பணம், வீடு போன்றவையெல்லாம் செல்வமல்ல. உண்மை, நேர்மை, சத்தியம்தான் பெரும் செல்வம். அந்த செல்வத்தை இழக்கக்கூடாது. 7-க்குடைய புதன், கேது, ராகு சம்பந்தம். களஸ்திரகாரகன் சுக்கிரன் நீசம். 5-க்குடைய செவ்வாய் நீசம்! எனவே மனைவி, மக்கள் இருந்தும் இல்லாமைக்கு சமம்! வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசிவரை யாரோ? 70 வயதிலும் உழைத்துச் சாப்பிட தெம்பு கொடுத்துள்ள இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். தனிமரமான உங்களுக்கு எதற்கு வீடு? உங்களுக்குப்பிறகு மனைவியும் மக்களும் அங்குவந்து உரிமை கொண்டாடவா? உங்களுக்குப்பிறகு அது பேய் வாழும் வீடாகிவிடும். கடைசிக்காலத்தில் எங்கேயாவது முதியோர் இல்லத்தில் அல்லது ஆசிரமத்தில் சேர்ந்து தெய்வ சிந்தனையாக நாளை ஓட்டுங்கள். திருவாரூர் மடப்புரத்தில் குரு தட்சிணாமூர்த்தி மடம் உள்ளது. அதுபோன்று உங்கள் மனதுக்குப் பிடித்த இடத்தில்போய் தங்கி தெய்வத்தொண்டு செய்யலாம். (ரிஷிகேஷ் என்ற ஊரில் கோவில்காட்டி என்ற இடத்தில் கார்த்திக் ஆசிரமம் இருக்கிறது. சேலம் சுவாமி ராதேஷானந்தா சரசுவதி நிர்வாகத்தில் நடக்கிறது. அங்குபோய் தொண்டு செய்யலாம்.) சொந்த வீடு கட்ட கடன் வாங்கவேண்டும். அந்தக் கடனை அடைக்க கவலைப்படவேண்டும். இதெல்லாம் இந்த வயதில் தேவையா? லக்னத்தில் குரு- தனிப்பட்ட முறையில் கடைசிவரை காப்பாற்றுவார். இன்றுவரை காப்பாற்றிவரும் குரு நாளை கைவிட்டுவிடுவாரா? நம்புங்கள். திருப்புனல்வாசல் அருகில் தீயத்தூர் என்ற கிராமத்தில் உங்களுடைய உத்திரட்டாதி நட்சத்திரத்துக்குரிய கோவில் இருக்கிறது. உங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று அங்குபோய் காலையில் அபிஷேக பூஜையில் கலந்துகொள்ளவும். அறந்தாங்கி அல்லது தேவகோட்டையிலிருந்து பஸ் போகும். தொடர்புக்கு: அர்ச்சகர் கணேசன், செல்: 99652 11768